ஆலங்குடி அருகே பாதை பிரச்சினை: போலீஸ் பாதுகாப்புடன் மூதாட்டி உடல் அடக்கம்

ஆலங்குடி அருகே பாதை பிரச்சினையால் போலீஸ் பாதுகாப்புடன் மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Update: 2019-11-23 23:00 GMT
ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா குப்பக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மொட்டமாங்கொள்ளை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மனைவி காந்திமதி (வயது 85) உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவரது உடலை சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதில் பாதை இல்லாமல் ஊரில் உள்ள பட்டா இடம் வழியாக உடலை எடுத்து செல்வதால் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் இறந்த காந்திமதியின் உடலை தனது இடத்தின் வழியாக எடுத்து செல்வதற்கு இடத்தின் உரிமையாளர் அனுமதி மறுத்துவிட்டனர்.

இதனால் நேற்று முன்தினம் எடுக்க வேண்டிய காந்திமதியின் உடலை, பொதுமக்கள் ஒன்றுகூடி எடுக்க மறுத்து விட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த காந்திமதியின் உறவினர்கள், இதுகுறித்து நேற்று ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இதைத்தொடர்ந்து ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், குப்பக்குடி கிராம நிர்வாக அதிகாரி கலையரசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் இறந்தவர்களின் உடலை வழக்கமாக கொண்டு சென்றுவந்த இடத்தின் உரிமையாளரை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அந்த இடத்திற்கு பட்டா, பத்திரம் போன்றவை இருப்பதால் இந்த ஒரு தடவை மட்டுமே உடலை அடக்கம் செய்ய அவரது இடத்தின் வழியாக கொண்டு செல்ல ஒப்புக்கொண்டனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காந்திமதியின் உடலை அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் மட்டும் கையில் தூக்கிக்கொண்டு சென்றனர். பின்னர் அந்த இடத்தை தாண்டிய பிறகு பாடை கட்டி சுடுகாட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்