கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரிப்பு

கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

Update: 2019-11-24 22:45 GMT
கன்னியாகுமரி,

புகழ் பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்தாலும், ஏப்ரல், மே மாதங்கள் கோடை விடுமுறை காலமாகவும், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் முக்கிய சீசன் காலமாகவும் கருதப்படுகிறது.

நவம்பர் மாதம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகளுக்காக நடை திறக்கப்படுவதால் அதிகளவு அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வருகை தருவார்கள்.

அய்யப்ப பக்தர்கள்     குவிந்தனர்

அதன்படி தற்போது சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி கடந்த 17–ந் தேதி முதல் கன்னியாகுமரியிலும் அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி உள்ளது. ஆனால், இந்த சீசன் கால தொடக்கத்தில் கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது.

இந்தநிலையில் நேற்று கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் களை கட்டி உள்ளது. இதையொட்டி நேற்று அதிகாலையிலேயே அய்யப்ப பக்தர்கள் வேன், கார், பஸ் போன்ற வாகனங்களில் வந்து குவிந்தனர். அதிகளவு வாகனங்கள் வந்ததால் சாலைகளின் ஓரங்களில் நிறுத்தும் நிலை ஏற்பட்டது. இதேபோல் சுற்றுலா பயணிகளும் அதிகளவு வருகை தந்தனர். அவ்வாறு வந்த அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். பின்னர், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

நீண்ட வரிசையில்...

அதை தொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், அதன் அருகில் மற்றொரு பாறையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண படகுத்துறையில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் சென்றனர்.

காந்தி, காமராஜர் மண்டபம், முக்கடல் சங்கம கடற்கரை, சன்னதி தெரு, ரதவீதிகள், கடற்கரை சாலை, கோவளம் நீர் விளையாட்டு அரங்கம், கன்னியாகுமரி விவேகானந்தபுரம் கடற்கரைபகுதியில் அமைந்துள்ள வெங்கடாசலபதி கோவில், பாரத மாதா கோவில், ராமாயண சித்திர கண்காட்சி கூடம் உள்ளிட்ட பகுதிகளிலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.

மேலும் செய்திகள்