மிளகு கொடி நாற்றுகளை பாதுகாப்பாக எடுக்க புதிய உபகரணம் உருவாக்கிய சேந்தன்குடி விவசாயி

மிளகு கொடி நாற்றுகளை பாதுகாப்பாக எடுக்க சேந்தன்குடி விவசாயி புதிய உபகரணம் உருவாக்கி நாற்றுகளை பாதுகாப்பாக எடுத்து வருகிறார்.

Update: 2019-11-24 22:45 GMT
கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள சேந்தன்குடி, பட்டிபுஞ்சை, வடகாடு உள்ளிட்ட சுற்றியுள்ள பல கிராமங்களில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக மிளகு சாகுபடி ஊடுபயிராக செய்யப்பட்டு வருகிறது. சமவெளி விளைநிலங்களிலும் தரமான மிளகு உற்பத்தி, அதிக மகசூல் செய்யலாம் என்பதை இந்த விவசாயிகள் கூறுகின்றனர். மேலும், மிளகு விவசாயத்தை தனியாக செய்ய வேண்டியதில்லை என்றும், வளர்ந்துள்ள தென்னை, தேக்கு, குமிழ் போன்ற மரங்களில் படரவிட்டு வளர்க்கலாம் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். அதிகமான செலவு இல்லை. ரசாயன உரம், பூச்சிக் கொல்லி மருந்தும் பயன்படுத்துவதில்லை என்பதால் மிளகு சாகுபடி அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றும் மிளகு விவசாயிகள் கூறுகின்றனர்.

நாற்று எடுக்க உபகரணம்

கீரமங்கலம் பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சமவெளியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மிளகு கொடிகளை வந்து பார்வையிட்ட விவசாயிகள் தாங்களும் சாகுபடி செய்ய நாற்று வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். அதனால் வடகாடு, சேந்தன்குடி, பட்டிபுஞ்சை பகுதியில் உள்ள மிளகு விவசாயிகள் மிளகு நாற்றுகளை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் மரங்களில் படர்ந்துள்ள மிளகு கொடிகள் தரையில் படரும் கொடி வேர் விட்டு வளரும் போது அதிலிருந்து நாற்று எடுக்கப்படுகிறது. அந்த நாற்றை வேர் பாதிக்கப்படாமல் எடுக்க சேந்தன்குடி விவசாயி செந்தமிழ்செல்வன் இரும்பு குழாய் மூலம் மண்ணோடு சேர்த்து பாதுகாப்பாக நாற்று எடுத்து புதிய பாக்கெட்டுகளில் வைக்க புதிய உபகரணம் உருவாக்கி அதன் மூலம் எளிமையாக நாற்று பறித்து வைத்துள்ளார்.

இதுகுறித்து விவசாயி செந்தமிழ்செல்வன் கூறுகையில், ஏராளமான விவசாயிகள் மிளகு நாற்று கேட்பதால் சமீப காலமாக நாற்று உற்பத்தி செய்து வருகிறேன். கையில் பறித்து பாக்கெட்டில் வைத்து வளர்க்கும் போது வேர் பாதிக்கப்பட்டு கன்று பழுது ஏற்படுகிறது. இதனால் இரும்பு குழாய் மூலம் ஒரு உபகரணம் உருவாக்கினேன். அதனைப் பயன்படுத்தி நாற்றோடு அதன் அடி மண்ணையும் எடுப்பதால் கன்றுகள் பழுது இல்லாமல் வளர்க்க முடிகிறது. மேலும் மிளகு நாற்றுமட்டுமல்ல பதியங்களில் கன்று உற்பத்தி செய்து பாக்கெட்டு வளர்க்கப்படும் எல்லாவிதமான கன்றுகளையும் பாதுகாப்பாக எடுக்கலாம் என்றார்.

மேலும் செய்திகள்