சாலை விபத்தில் வக்கீல் பலி: படுகாயமடைந்த மகனும் சாவு

சாலை விபத்தில் வக்கீல் பலியானதை தொடர்ந்து படுகாயமடைந்த அவரது மகனும் உயிரிழந்தார். வக்கீல் அம்மாவின் நினைவாக கட்டப்பட்ட கோவில் வளாகத்தில் இரு உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.

Update: 2019-11-24 22:45 GMT
துவாக்குடி,

திருச்சி துவாக்குடி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் ராஜராஜசோழன்( வயது 47). வக்கீல். இவர், நேற்று முன்தினம் தனது மூத்த மகன் சேரலாதனை (12) சிலம்பு பயிற்சிக்கு அழைத்து சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் தாலுகா அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒரு லாரி புறப்பட்டு கணேசா ரவுண்டானாவில் திரும்பியது. அப்போது, எதிர்பாராதவிதமாக லாரியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தந்தை, மகன் இருவரும் படுகாயமடைந்தனர். விபத்தை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ராஜராஜ சோழன் மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உடல்கள் அடக்கம்

சேரலாதன், திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவனும் உயிரிழந்தான். பின்னர், அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ராஜராஜ சோழனின் தாயார் ஏற்கனவே இறந்து விட்டார். தாயின் மீது அதிக பாசம் வைத்திருந்த அவர், தாயாரின் நினைவாக மாதாகோவில் தெருவில் அவருக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்டினார்.

தற்போது சாலை விபத்தில் தந்தையும், மகனும் இறந்ததை தொடர்ந்து அந்த கோவிலின் வளாகத்தில் ராஜராஜசோழன் மற்றும் சேரலாதன் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இந்த விபத்து குறித்து ராஜராஜசோழனின் சகோதரர் புவியரசன் கொடுத்த புகாரின்பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்