மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு

மனைவியின் கள்ளக்காதலனை கொலை செய்தவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

Update: 2019-11-26 22:15 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது பானாகுளம். இந்த ஊரைச்சேர்ந்தவர் முத்துக்கருப்பன் (வயது 27). கொத்தனார் வேலை செய்து வந்தார். முத்துக்கருப்பனுக்கு திருமணமாகாத நிலையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான திருப்பதி (30) என்பவரது மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.

இதுதொடர்பாக முத்துக்கருப்பனை திருப்பதி கண்டித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 29.6.2010 அன்று திருப்பதி இல்லாத நேரத்தில் அவரது வீட்டுக்கு வந்த முத்துக்கருப்பன் அவரது மனைவி உடன் இருந்துள்ளார். திடீரென வீட்டுக்கு வந்த திருப்பதி இருவரையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆத்திரமடைந்த திருப்பதி அருகே கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து முத்துக்கருப்பனை தாக்கியுள்ளார். இதில் முத்துக்கருப்பன் இறந்து போனார்.

இந்த கொலை தொடர்பாக கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முத்துசாரதா விசாரித்து திருப்பதிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்