திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி முன்பு மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவிகள் சாலை மறியல்

திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவிகள் மடிக்கணினி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தலைமையாசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. .

Update: 2019-11-27 22:30 GMT
திருப்பூர், 

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு விலையில்லா மடிக்கணினி வழங்கி வருகிறது. ஆனால் கடந்த 2017-2018, 2018-2019-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது 2019-2020-ம் கல்வியாண்டில் பிளஸ்-1, பிளஸ்-2 படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த மாதம் மடிக்கணினி வழங்கப்பட்டது. இதனால் தங்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று முன்னாள் மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

அதைத்தொடர்ந்து அவர்களுக்கும் விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 2018-2019-ம் ஆண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மடிக்கணினிகளும் பள்ளிகளுக்கு வந்து சேர்ந்துள்ளது.

இந்த நிலையில் திருப்பூர் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2018-2019-ம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவிகளுக்கு நேற்று மடிக் கணினி வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

மாணவிகள் தற்போது படிக்கும் கல்லூரியில் இருந்து சான்றிதழ் மற்றும் பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை பள்ளி வளாகத்தில் மாணவிகள் கூடினர்.

ஆனால் மாணவிகளில் பலர் கல்லூரிக்கு செல்லாததாலும், சில மாணவிகள் இஸ்லாமிய பள்ளிகளில் (மதரசாபள்ளி) உருது படிக்க சேர்ந்துள்ளதாலும் கல்லூரி சான்றிதழ் கொண்டு வரவில்லை. இதனால் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு மட்டுமே மடிக்கணினி வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது என்று தலைமையாசிரியை ரத்தினம் தெரிவித்தார்.

இதையடுத்து முன்னாள் மாணவிகள் அனைவரும் தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்று தலைமையாசிரியையிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் இன்று (நேற்று) மடிக்கணினி யாருக்கும் வழங்குவதில்லை. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் பேசி விட்டு அதன் பிறகு தான் வழங்கப்படும் என்று தலைமையாசிரியை தெரிவித்தார்.

அப்போது மாணவிகளுடன் வந்திருந்த பெற்றோர் சிலர், இந்த ஆண்டு பிளஸ்-2 படிக்கும் மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி உள்ளீர்கள், அவர்கள் அனைவரும் தொடர்ந்து படிப்பார்கள் என்பது என்ன நிச்சயம் என்று கேட்டனர். அரசு உத்தரவை நான் சொல்லி விட்டேன். நீங்கள் கேட்கும் இது போன்ற கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது என்று தலைமையாசிரியை தெரிவித்தார்.

இதனால் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியே வந்த மாணவிகள் பள்ளிக்கு முன்பு ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் மடிக்கணினி வேண்டும் என்று கோஷமிட்டனர். இந்த சாலை மறியலால் காங்கேயம் ரோட்டில் இருந்து பெரிய பள்ளிவாசல் வழியாக கே.எஸ்.சி. பள்ளி ரோட்டுக்கு வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் எற்பட்டது.

தகவல் தெரிந்து அங்கு வந்த போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினர். அப்போது பள்ளிக்கு வந்த போலீஸ் உதவி கமிஷனர் நவீன்குமார் தலைமையாசியையிடம் விவரம் கேட்டு அறிந்தார். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேசிய அவர், அரசு உத்தரவை தான் தலைமையாசிரியை உங்களிடம் தெரிவித்துள்ளார். உங்களுக்கு கொடுப்பதற்குதான் மடிக்கணினிகள் வந்துள்ளன. எனவே அனைவருக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படும். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சென்னை சென்றுள்ளதால் அவர் வந்தவுடன் அவரிடம் உங்கள் பிரச்சினைகள் குறித்து பேசி உங்களுக்கு 2 நாட்களில் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். 

இதனால் சமாதானம் அடைந்த மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் நீடித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்