அடகு கடையில் பூட்டை உடைத்து ரூ.20 பவுன் நகை கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு

கருங்கலில் அடகு கடையில் பூட்டை உடைத்து 20 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2019-11-27 23:00 GMT
கருங்கல்,

குமரி மாவட்டம் வில்லுக்குறி கிணற்றடிவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவருடைய மகன் ஏசிந்துராஜ் (வயது 32). இவர் கருங்கலில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

நேற்றுமுன்தினம் இரவு பணி முடிந்ததும் இவர் கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலையில் அதே வணிக வளாகத்தில் உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் ராபின்சன் என்பவர் அங்கு சென்றார்.

20 பவுன் நகை கொள்ளை

அப்போது ஏசிந்துராஜ் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனை பார்த்த அவர், இதுகுறித்து ஏசிந்துராஜிக்கு தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து கடையை பார்வையிட்டார். அங்கு கடையின் பாதுகாப்பு பெட்டகத்தை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.3 ஆயிரத்து 500 கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இந்த துணிகர கொள்ளை பற்றி தகவல் அறிந்த கருங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

கைரேகை நிபுணர்கள்

மேலும் மோப்பநாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் மோப்பம் பிடித்த நாய் சம்பவ இடத்தில் இருந்து அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் வரை ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

அதே சமயத்தில் கைரேகை நிபுணர்கள், கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த ைகரேகையை பதிவு செய்தனர். கொள்ளையடித்த மர்மநபர்களின் உருவம் வணிக வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

பரபரப்பு

இதுதொடர்பாக கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

வணிக வளாகத்தில் உள்ள அடகு கடையில் 20 பவுன் நகைகள் கொள்ளை போன சம்பவம் கருங்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்