உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து கலெக்டர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து தர்மபுரியில் கலெக்டர்கள், அதிகாரிகள் பங்கேற்ற மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.

Update: 2019-11-27 22:45 GMT
தர்மபுரி,

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து தர்மபுரி, கிரு‌‌ஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் தர்மபுரி ஜோதி மகாலில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எல்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர்கள் மலர்விழி (தர்மபுரி), ராமன் (சேலம்), ெமகராஜ் (நாமக்கல்) தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், திட்ட இயக்குனர் ஆர்த்தி, உதவி கலெக்டர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 4 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமனம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிதல், அத்தகைய வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. உள்ளாட்சி தேர்தலின்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வேட்புமனுக்களை பெற்று பரிசீலிக்கும் வழி முறைகள், வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் ஆணைய செயலாளர் எல்.சுப்பிரமணியன் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கி பேசினார்.

விரிவான பயிற்சி

உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் வாக்குச்சாவடி அலுவலர்கள் குறித்த விவரங்களை சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை, கணினி மூலம் பணியிடங்களை ஒதுக்கீடு செய்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தும் முறை குறித்தும் ஊரக மற்றும் நகர்ப்புற தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையத்தை சேர்ந்த அலுவலர்கள் விரிவான பயிற்சியை அளித்தனர்.

இந்த கூட்டத்தில் தேர்தல் பிரிவு போலீஸ் ஐ.ஜி. சே‌‌ஷசாயி, மாநில தேர்தல் ஆணைய முதன்மை தேர்தல் அலுவலர் (நகராட்சிகள்) சரவணன், மாநில தேர்தல் ஆணைய உதவி ஆணையர் சம்பத், மாவட்ட வருவாய் அலுவலர்கள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளின் ஆணையர்கள், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்கள் உள்ளிட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்