பாபநாசம் அணையில் இருந்து 2,500 கனஅடி தண்ணீர் திறப்பு - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் 142.35 அடியாக உயர்ந்து உள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 2,500 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2019-11-27 22:00 GMT
விக்கிரமசிங்கபுரம், 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகள், நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் நேற்று 142.35 அடியாக (அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 143 அடி) உயர்ந்தது. இதனால் நேற்று மதியம் அணையின் பாதுகாப்பு கருதி 6 மதகுகளில் முக்கிய மதகுகளான 3-வது, 4-வது மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

அணைக்கு வினாடிக்கு 1,946 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையில் இருந்து அந்த 2 மதகுகள் வழியாக வினாடிக்கு 2,500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதனால் தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பாபநாசம் அகஸ்தியர் அருவியில் யாரையும் குளிக்க வனத்துறையினர் அனுமதிக்கவில்லை. மேலும், அகஸ்தியர் அருவிக்கு மேலே செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். அங்கு வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதேபோல் 156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 150.52 அடியாக உயர்ந்து உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த அணையின் நீர்மட்டம் 75.75 அடி இருந்தது. நேற்று ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 77.70 அடியாக அணையின் நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,467 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாசனத்துக்கு வினாடிக்கு 35 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

பாபநாசம், மணிமுத்தாறு, விக்கிரமசிங்கபுரம் பகுதியில் நேற்று மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதேபோல் வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 10 அடியாகவும், நம்பியாறு 15.25 அடியாகவும், கொடுமுடியாறு அணை 35 அடியாகவும் உயர்ந்து உள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணையின் மொத்த கொள்ளளவு 85 அடி உயரமாகும். அந்த அணையின் நீர்மட்டம் 84.50 அடியாக உயர்ந்து உள்ளது. இதனால் அணைக்கு வந்து கொண்டுள்ள 266 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ராமநதி அணையின் நீர்மட்டம் 78.50 அடியாகவும், கருப்பாதி அணையின் நீர்மட்டம் 70.21 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 131.50 அடியாகவும் உள்ளது. இந்த அணைகள் முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதாலும், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் அணைகளுக்கு வருகின்ற தண்ணீர் அப்படியே பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-

ராதாபுரம்-7, நாங்குநேரி-5.3, பாளையங்கோட்டை-4, நெல்லை-3.6, அம்பை -3, சேரன்மாதேவி -2, சங்கரன்கோவில் -2, தென்காசி-2.

அணை பகுதிகளில் பாபநாசம் -7, சேர்வலாறு -6, மணிமுத்தாறு -6, ராமநதி -8, கடனாநதி-2, கருப்பாநதி -1, குண்டாறு-4.

மேலும் செய்திகள்