ஆரல்வாய்மொழி அருகே பரிதாபம் கல்லூரிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை

ஆரல்வாய்மொழி அருகே கல்லூரிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-11-28 22:15 GMT
ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தெற்கு குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மனைவி பொன்கிளி. கணவன்- மனைவி இருவரும் வாழை இலை அறுக்கும் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுடைய மகன் சுமன் (வயது 19). இவர் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சுமன் சரியாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பும் கல்லூரிக்கு செல்லாமல் இருந்ததால் மீண்டும் சுமனை கண்டித்தனர். இதனால், சுமன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்தார்.

விஷம் குடித்தார்

இந்த நிலையில் நேற்றுமுன்தினம் பாலகிருஷ்ணன் வழக்கம்போல் மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சுமன் மட்டும் தனியாக இருந்தார். மாலையில் பாலகிருஷ்ணன் வேலையை முடித்து விட்டு வீடு திரும்பினார். அப்போது, சுமன் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுமன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சுமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரிக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் மாணவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்