ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200-க்கு விற்பனை குளிர்பதன கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை

அரவக்குறிச்சி பகுதியில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200-க்கு விற்பனையாகிறது. இங்கு குளிர்பதன கிடங்கு அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-11-28 22:45 GMT
அரவக்குறிச்சி,

கரூர் மாவட்டம், அரவக் குறிச்சி தாலுகா பகுதி மக்கள் பெரும்பாலானோர், விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே கடும் வறட்சி நிலவியதால், இப்பகுதி விவசாயி களுக்கு முருங்கைக்காய் சாகுபடியே வாழ்வாதாரமாக விளங்குகிறது. முருங்கையில் செடிமுருங்கை, மரமுருங்கை என இரு வகை உள்ளது.

தற்போது காய்கள் காய்ப்பது குறைந்துள்ளதால் முருங்கைக்காய்கள் அதிக விலைக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ முருங்கைக்காய்கள் ரூ.150 முதல் ரூ.200 வரை விலை போகிறது. ஒரு கிலோவுக்கு 10 முதல் 12 காய்கள் வரை இருக்கும் என விற்பனையாளர்கள் தெரிவித்தனர். முருங்கைக்காய் நல்ல விலைக்கு விற்பனையாவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முருங்கை சீசன் ஜனவரி மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இருக்கும். இச்சமயங்களில் காய்கள் அதிக அளவு காய்க்கும். அப்போது விலை குறையும்.

குளிர்பதன கிடங்கு

இதுபற்றி முருங்கைக்காய் வியாபாரிகள் கூறுகையில், அரவக்குறிச்சி, சின்னதாரா புரம், க.பரமத்தி, பள்ளப் பட்டி, ஆத்துமேடு, ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து முருங்கைக்காய்கள் கொள்முதல் செய்யப்பட்டு, சென்னை மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் எங்களுக்கு கமி‌‌ஷன் கிடைக்கும், என்றனர்.

இப்பகுதியில் முருங்கை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கை அரசு அமைத்து கொடுத்தால், அதிக விளைச்சல் உள்ளபோது சேமித்துவைத்து நல்ல விலை உள்ளபோது விற்றுக்கொள்ளலாம். எனவே இதுதொடர்பாக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்