நாகர்கோவிலில் மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி

நாகர்கோவிலில் மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி நடைபெற்றது.

Update: 2019-11-30 23:00 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்ட மூத்தோர் தடகளம் சார்பில் மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டி நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியது. இதற்கான தொடக்க விழாவுக்கு தமிழ்நாடு மூத்தோர் தடகள தலைமை புரவலர் உஜாகர்சிங் (ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி) தலைமை தாங்கினார். குமரி மாவட்ட விளையாட்டு அதிகாரி டேவிட் டேனியல் கொடி ஏற்றி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக வடசேரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பெர்னார்ட் சேவியர், மாநில மூத்தோர் தடகள தலைவர் அரங்கநாத நாயுடு, செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மூத்தோருக்கான தடகள போட்டி நடைபெற்றது. இதில் 5 ஆயிரம் மீட்டர் (ஆண்கள்), 3 ஆயிரம் மீட்டர் (ஆண், பெண்கள்) நடைபோட்டி, ஓட்டம், ஆண்கள், பெண்களுக்கான வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து 800 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 350 பேர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

வெற்றி பெற்றவர்கள் விவரம்

40 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் நடந்த உயரம் தாண்டுதல் போட்டியில் ரெயில்வே துறையை சேர்ந்த ஆறுமுகம்பிள்ளை முதல் பரிசு பெற்றார். 55 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் நடந்த வட்டு எறிதல் போட்டியில் வருமானவரித்துறை அதிகாரி பாலாஜி முதல் பரிசும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஆஸ்டின் ரூபஸ்சும், 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான 400 மீ., 1500 மீ ஓட்டப் போட்டியில் எல்லை பாதுகாப்பு படை போலீஸ்காரர் மணிகண்டன், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான 400 மீ., 1500 மீ ஓட்டப்போட்டியில் எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி சேகர், 90 வயதுக்கு மேற்பட்டோருக்கான குண்டு எறிதல் போட்டியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வான்ரோஸ் ஆகியோரும் முதல் பரிசு பெற்றனர்.

2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தடகள போட்டிகள் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கிறது.

மேலும் செய்திகள்