நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை: வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2019-12-01 22:30 GMT
ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், மேகமலை, வருசநாடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக வைகை ஆற்றில் நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதுதவிர தேனி மாவட்டத்தில் போடி கொட்டக்குடி ஆறு, கம்பம் சுருளி ஆறு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு சராசரியாக 1,900 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர் நேற்று காலை 6 மணி நிலவரப்படி, 2 ஆயிரத்து 604 கனஅடியாக அதிகரித்தது.

நீர்வரத்து அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 64.21 அடியாக உயர்ந்தது. வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காகவும், மதுரை மாநகர குடிநீர் தேவைக்கும் சேர்த்து வினாடிக்கு 2 ஆயிரத்து 90 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அதிகமான தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வைகை அணை அதன் முழுக்கொள்ளளவை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைகை அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதாலும், அணைகள் மற்றும் கண்மாய்கள் நிரம்பி வருவதாலும் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்