அம்பத்தூர் எஸ்டேட்டில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி சாவு - உறவினர்கள் சாலை மறியல்

அம்பத்தூர் எஸ்டேட்டில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-12-01 23:00 GMT
பூந்தமல்லி,

சென்னை அம்பத்தூர் எஸ்டேட், நேரு நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் சேக் அலி(வயது 46). கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அம்பத்தூர் எஸ்டேட் மண்ணூர்பேட்டையில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பலத்த மழை பெய்துகொண்டு இருந்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த பகுதியில் சாலையோரம் உள்ள மழைநீர் கால்வாய் பணி முழுமை பெறாமல் இருந்ததாக தெரிகிறது. கால்வாய் இருப்பதே தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது.

இதனால் அந்த வழியாக நடந்து சென்ற சேக் அலி, மழைநீர் கால்வாயில் தவறி விழுந்துவிட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், சேக் அலியை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் சாலையின் அடியில் உள்ள சிறுபாலத்துக்குள் அடித்துச்செல்லப்பட்டார். இதனால் அவரை மீட்க முடியாமல் பொதுமக்கள் திணறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து மழைநீர் கால்வாயில் விழுந்த சேக் அலியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் அவரை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் சேக் அலியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு அலறி அடித்து ஓடிவந்தனர். அவரை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த அரசு பஸ்சின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினார்கள்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை அவர்கள் ஏற்கவில்லை. தண்ணீரை உறிஞ்சும் வாகனங் களை கொண்டுவந்து தண்ணீரை உறிஞ்சி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதுவும் தோல்வியில் முடிவடைந்தது.

நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு சேக் அலியை பிணமாக மீட்டனர். மழைநீர் கால்வாயில் விழுந்த அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டார். அவரது உடலை கண்டு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

சேக் அலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த அம்பத்தூர் எஸ்டேட் போலீசார், மேலும் இதுபற்றி விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்