மாவட்டத்தில் பரவலாக மழை: நாமக்கல்லில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் பதிவு

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தாலும், நாமக்கல்லில் அதிகபட்சமாக 20 மி.மீட்டர் மழை பதிவானது.

Update: 2019-12-01 22:15 GMT
நாமக்கல், 

தமிழகம் முழுவதும் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நாமக்கல், கொல்லிமலை உள்பட பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. அதிகபட்சமாக நாமக்கல்லில் 20 மி.மீட்டர் மழை பதிவானது.

நேற்று காலை 7 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- நாமக்கல்-20, கொல்லிமலை-10, மங்களபுரம்-9, ராசிபுரம்-6, திருச்செங்கோடு-5, எருமப்பட்டி-4, சேந்தமங்கலம்-4, மோகனூர்-2, புதுச்சத்திரம்-2, கலெக்டர் அலுவலகம்-2, குமாரபாளையம்-1. மாவட்டத்தின் மொத்த மழை அளவு 65 மி.மீட்டர் ஆகும். இந்த மழை நேற்றும் நீடித்தது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் நேற்று காலை முதல் மாலை வரை இடைவிடாது மழை பெய்ததால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதை காண முடிந்தது.

குறிப்பாக குட்டை மேலத்தெருவில் சாலையில் சுமார் 1 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் மழை காரணமாக பொதுமக்களும், பஸ் பயணிகளும் குடை பிடித்து செல்வதையும் பார்க்க முடிந்தது. வாகன ஓட்டிகள் பகலிலும் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு மெதுவாக வாகனங்களை ஓட்டிச்சென்றனர். காலை முதல் மாலை வரை சூரிய ஒளிகதிர்கள் வெளியே தெரியாத அளவுக்கு மேகமூட்டம் காணப்பட்டதால் இருண்ட வானிலையே நிலவியது.

மேலும் செய்திகள்