சேலத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்: கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்

சேலத்தில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார்.

Update: 2019-12-01 22:15 GMT
சேலம், 

உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, எச்.ஐ.வி. எய்ட்ஸ் தடுப்புப்பணியில் ‘மாற்றத்தினை ஏற்படுத்துதல்’ என்ற தலைப்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி உறுதிமொழியை வாசித்தார். அலுவலர்கள், மாணவர்கள் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர் எய்ட்ஸ் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு தினத்தின் மற்றொரு நிகழ்வாக, மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் முள்ளுவாடி கேட், அஸ்தம்பட்டி, 5 ரோடு, 3 ரோடு, திருவாக்கவுண்டனூர், கொண்டலாம்பட்டி புறவழிச்சாலை, குகை வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் சேலம் பைக்கர்ஸ் கிளப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்தபடி கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியாக அரசு ஆஸ்பத்திரியில் முடிவடைந்தது.

இதில் அரசு மோகன் குமாரமங்கலம் செவிலியர் கல்லூரி, விநாயகா மி‌‌ஷன் மருத்துவக்கல்லூரி மற்றும் அன்னபூரணா செவிலியர் கல்லூரிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.

ஊர்வலத்தில் மருத்துவப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வளர்மதி, துணை இயக்குனர்கள் நிர்மல்சன், கோகுல கண்ணன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்