மணவாடி ஊராட்சியில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்

மணவாடி ஊராட்சியில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

Update: 2019-12-01 22:30 GMT
வெள்ளியணை,

தமிழக அரசின் சிறப்பு திட்டத்தின்கீழ் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கிராமப்புற ஏழைகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கரூர் மாவட்டம், மணவாடி ஊராட்சி கத்தாளபட்டியில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கீதா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

கால்நடைபராமரிப்புத்துறை மண்டல துணை இயக்குனர் மோகன்ராஜ் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, 163 பயனாளி களுக்கு ரூ.20 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான ஆடுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கால்நடை ஆம்புலன்ஸ்

தமிழக அரசு கிராமப்புறத்தில் உள்ள ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விலையில்லா ஆடுகள், மாடுகள், நாட்டுக்கோழிகள் ஆகியவற்றை வழங்கி வருகிறது. மேலும் நோயுற்ற மாடுகளை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு எடுத்துச்சென்று சிகிச்சை அளிக்கும் கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தை தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இங்கு விலையில்லாமல் வழங்கப்பட்டுள்ள ஆடுகளை நன்கு பராமரித்து பயனாளிகள் தங்கள் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இதில் கால்நடை பாரமரிப்புத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கால்நடை மருத்துவர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்