குண்டூரில் மாணவர்கள் தங்கியுள்ள வீட்டின் பின்புறம் வளர்ந்த கஞ்சா செடிகள் அழிப்பு

குண்டூரில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள வீட்டின் பின்புறம் வளர்ந்த கஞ்சா செடிகளுடன், அவர்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இதையடுத்து கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர்.

Update: 2019-12-01 22:15 GMT
துவாக்குடி,

துவாக்குடியை அடுத்த நவல்பட்டு அருகே உள்ள குண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாகவும், இதனால் இளைஞர்களும், அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குண்டூர் பகுதியில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் வெளியூர் மாணவர்கள், அந்த பகுதியில் தனியாக உள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகைக்கு தங்கி, கல்லூரிக்கு சென்று வருகின்றனர்.

இதேபோல் குண்டூர் அய்யனார் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மாணவர்கள் தங்கி, அப்பகுதியில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனர்.

கஞ்சா செடிகளுடன் செல்பி

அந்த வீட்டின் பின்புறம் உள்ள காலிமனையில் கஞ்சா செடிகள் வளர்ந்திருந்தன. அந்த கஞ்சா செடிகளோடு சில மாணவர்கள் செல்பி எடுத்து, அதை சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ளனர். இது குறித்து நவல்பட்டு போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், கஞ்சா செடிகளை அழித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து அந்த பகுதிகளில் உள்ள மாணவர்களை எச்சரித்தனர். மேலும் அங்கு கஞ்சா செடி எப்படி வளர்ந்தது?, யாரேனும் வளர்த்தார்களா?, அல்லது தானாக முளைத்து வளர்ந்ததா? என்று நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்