மழை பாதித்த பகுதிகளை கவர்னர் பார்வையிட்டார்

புதுவையில் மழை பாதித்த பகுதிகளில் கவர்னர் கிரண்பெடி பார்வையிட்டார்.

Update: 2019-12-01 22:45 GMT
புதுச்சேரி,

புதுவையில் கடந்த 3 நாட்களாக பலத்தமழை பெய்து வருகிறது. நேற்று காலை கவர்னர் கிரண்பெடி மழை பாதித்த பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து புறப்பட்ட அவர் உப்பனாறு வாய்க்காலை பார்வையிட்டார்.

பின்னர் அங்கிருந்து மரப்பாலம், நடேசன் நகர், இந்திராகாந்தி சிலை சதுக்கம், ரெயின்போநகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளுக்கு சென்றார். அப்போது அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம் மழைநீரை வெளியேற்றவும், போக்கு வரத்தை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

இது குறித்து கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தொடர்மழை ஏற்படும் போது மரப்பாலம் சந்திப்பு போக்குவரத்துக்கு சவாலாக உள்ளது. அந்த பகுதியில் உள்ள வாய்க்கால் அதிக தண்ணீர் செல்ல போதுமானதாக இல்லை. எனவேதான் மழைகாலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்குகிறது. இதற்கு உடனடியாக பொறியியல் சார்ந்த தீர்வு தேவை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்தும்போது இதனை முழுமையாக சீரமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு கவர்னர் கிரண்பெடி சென்றார். அங்கு குற்றப்பதிவேடுகளை பார்வையிட்டார். பின்னர் போலீஸ் நிலையத்தை சுற்றிப்பார்த்த அவர், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க போலீசாரை அறிவுறுத்தினார். ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்