கொடைக்கானலில் விடிய, விடிய கனமழை, மண் சரிவு; மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

கொடைக்கானலில் நேற்று முன்தினம் விடிய, விடிய கனமழை பெய்தது. மழையால் மண் சரிவு ஏற்பட்டதுடன், சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-12-02 22:15 GMT
கொடைக்கானல், 

கொடைக்கானல் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று முன்தினம் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை, மறுநாள் அதிகாலை 3 மணி வரை பெய்தது. அவ்வப்போது சாரல் மழையாகவும், கனமழையுமாக வெளுத்து வாங்கியது.

இதனால் நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. ஏரிச்சாலை பகுதியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. பல கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. மேலும் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொடைக்கானலை பொறுத்தவரை நேற்று காலை 8 மணி வரை போர்ட்கிளப்பில் 35 மி.மீ. மழை அளவு பதிவானது. கனமழை காரணமாக வத்தலக்குண்டு சாலையில், குருசடி என்ற இடத்தின் அருகில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் 2 மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். இதையடுத்து போக்குவரத்து இயல்புநிலைக்கு திரும்பியது. மரங்கள் விழுந்ததால் கொடைக்கானல்-வத்தலக்குண்டு சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் உகார்த்தேநகரில் மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும் அதிகாரிகள் உடனடியாக மண்சரிவை சீரமைத்தனர்.

இதற்கிடையே நேற்று கொடைக்கானலில் விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்