கேமராக்கள் செயலிழப்பு: தேர்தல் ஆணையம் முழு கண்காணிப்பில் இருக்க வேண்டும் - எல்.முருகன் பேட்டி

கேமராக்கள் செயலிழப்புக்கு பொருந்தாத காரணங்கள் சொல்வதை நிறுத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு எல்.முருகன் அறிவுரை கூறியுள்ளார்.

Update: 2024-04-28 07:26 GMT

நீலகிரி,

மத்திய இணை மந்திரியும், நீலகிரி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான எல்.முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

நேற்று நீலகிரி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடம் செயலிழந்ததாக தகவல் வெளியானது. தொழில்நுட்ப கோளாறு மற்றும் வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக கூறுகிறார்கள். தொழில்நுட்ப கோளாறுகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பணி. ஊட்டியிலும் வெயில் அதிகமாகதான் உள்ளது. எந்த காரணமும் சொல்லாமல் 24 மணி நேரமும் தேர்தல் ஆணையம் முழு கண்காணிப்பில் இருக்க வேண்டும். கேமரா செயலிழப்புக்கு பொருந்தாத காரணங்கள் சொல்வதை நிறுத்த வேண்டும்.

நீலகிரி, கோவை, தென் சென்னை தொகுதிகளில் அதிகளவு வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க.,வின் தோல்வியை மறைக்க வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டு உள்ளது. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சேதப்படுத்த முடியாது என தேர்தல் கமிஷன் பல முறை விளக்கம் அளித்து உள்ளது. காங்கிரசும், ‛ இந்தியா' கூட்டணியும் தோல்வி பயத்தால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி ஏதாவது கூறி திசைதிருப்பி வருகின்றனர்.

500 ஆண்டுகால மக்களின் போராட்டம், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. அங்கு செல்ல மாட்டேன் என ராகுல் கூறுவது, கடவுள் மீது அவருக்கு நம்பிக்கையில்லை என்பதை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

மேலும் செய்திகள்