பவானிசாகர் அணை 3-வது முறையாக நிரம்பியது - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

இந்த ஆண்டு பவானிசாகர் அணை 3-வது முறையாக நிரம்பியது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Update: 2019-12-02 22:30 GMT
பவானிசாகர், 

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற புகழையும், தமிழ்நாட்டின் 2-வது பெரிய அணை என்ற பெருமையையும் கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணைக்கு நீலகிரி மலைப்பகுதியில் இருந்து வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து வரும் மாயாறும் நீர் ஆதாரங்களாக உள்ளன.

பவானிசாகர் அணையின் மொத்த உயரம் 120 அடி. இதில் சகதி 15 அடி கழித்து கொள்ளளவு 105 அடியாக கணக்கிடப்படுகிறது. . பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 2 லட்சத்து 7 ஆயிரம் நிலங்களும், பவானி ஆற்றின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் ஆகிய பாசன பகுதியைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.

இதுதவிர புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், பவானி உள்ளிட்ட நகராட்சி பகுதிகளுக்கும் 20-க்கும் மேற்பட்ட பேரூராட்சி பகுதிகளுக்கும், 100-க்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இப்படி முக்கியத்துவம் பெற்ற பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நீலகிரி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் 12 வருடங்களுக்கு பிறகு 102 அடியை தொட்டது. அக்டோபர் மாதம் இறுதி வரை அணையின் பாதுகாப்பு கருதி 102 அடிக்குமேல் தண்ணீர் தேக்க முடியாத காரணத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பவானி ஆற்றில் அதிகபட்சம் 75 ஆயிரம் கன அடி வரை உபரி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதையடுத்து இந்த ஆண்டிலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்த காரணத்தால் கடந்த மாதம் தொடக்கத்திலிருந்து பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த அக்டோபர் மாதம் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 102 அடியை தொட்டது. நவம்பர் மாதம் முதல் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 105 அடி வரை நிறுத்த முடியும் என்பதால் கடந்த நவம்பர் 1-ந் தேதி முதல் பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பது நிறுத்தப்பட்டது. இதையடுத்து அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால் 40 ஆண்டுகளுக்கு பின் கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி இரவு 11 மணி அளவில் அணையின் முழு கொள்ளளவான 105 அடியை தொட்டதால் அணையிலிருந்து மேல் மதகு மூலம் உபரிநீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.

இதற்கிடையே நீர்வரத்து குறைந்ததால், நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 105 அடியில் இருந்து 104.97 அடியாக குறையத் தொடங்கியது. இந்தநிலையில் வெப்ப சலனத்தின் காரணமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பவானிசாகர் அணைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று அதிகாலை 5 மணி அளவில் பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3,217 கனஅடி தண்ணீர் வந்ததால் அணையின் நீர்மட்டம் மீண்டும் முழு கொள்ளளவான 105 அடியை தொட்டது.

இதனால் அணையிலிருந்து மேல் மதகு மூலம் பவானி ஆற்றில் உபரி தண்ணீராக வினாடிக்கு 1,900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீர் அதிகரித்ததால் மதியம் 11 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 26 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையில் இருந்து பவானி ஆற்றின் மூலம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 30,427 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 29 ஆயிரம் கனஅடி உபரிநீரும், கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்காக வினாடிக்கு 1,300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது. பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் அணைக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர். பவானி ஆற்றில் தொடர்ந்து உபரி தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மீண்டும் பவானிசாகர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 3-வது முறையாக நிரம்பி உள்ளதால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்