விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ந‌‌ஷ்டஈடு வழங்காததால் ராசிபுரத்தில் அரசு பஸ் ஜப்தி

விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ந‌‌ஷ்டஈட்டு தொகை வழங்காததால், ராசிபுரத்தில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-12-03 23:00 GMT
ராசிபுரம்,

ராசிபுரம் அருகேயுள்ள குருக்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கொண்டி. இவர் கடந்த 5.4.2013-ந் தேதி ராசிபுரம் - திருச்செங்கோடு சாலையில் குருக்கபுரம் காலனி தண்ணீர் டேங்க் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சேலம் கோட்டத்தை சேர்ந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கொண்டி இறந்தார்.

இதையொட்டி விபத்தில் இறந்த கொண்டியின் மகன் கொண்டன், வக்கீல் பி.செந்தில்குமார் மூலம் ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் ந‌‌ஷ்டஈடு கேட்டு அரசு போக்குவரத்துக் கழகத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்றம், கொண்டியின் குடும்பத்திற்கு கடந்த 22.3.2017-ந் தேதி ந‌‌ஷ்டஈடாக ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 40-ஐ வட்டியுடன் வழங்கும்படி அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டது.

பஸ் ஜப்தி

இந்த ந‌‌ஷ்டஈட்டுத் தொகையை அரசு போக்குவரத்துக் கழகம் வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்யும்படியும், வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 88 ஆயிரத்து 720-ஐ வழங்கும்படியும் நிறைவேற்று மனுவை சார்பு நீதிமன்றத்தில் கொண்டன் தாக்கல் செய்தார். இருந்தாலும் ந‌‌ஷ்டஈட்டுத் தொகையை அரசு போக்குவரத்துக்கழகம் செலுத்தாததால் ராசிபுரம் சார்பு நீதிமன்ற நீதிபதி சி.எம்.சரவணன் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று நாமக்கல்லில் இருந்து ராசிபுரம் பஸ் நிலையத்திற்கு வந்த சேலம் கோட்டத்தை சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக டவுன் பஸ்சை ராசிபுரம் சார்பு நீதிமன்ற ஊழியர் (அமீனா), வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரருடன் அரசு பஸ்சை ஜப்தி செய்தார். ஜப்தி செய்யப்பட்ட அரசு டவுன் பஸ்சை ராசிபுரம் சார்பு நீதிமன்றத்திற்கு நீதிமன்ற ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் ராசிபுரம் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்