ராக்கெட்டின் எரிபொருள் டேங்கரை எடுத்து செல்ல மீனவர்கள் எதிர்ப்பு நிவாரணம் வழங்கக்கோரி போராடியதால் பரபரப்பு

நிவாரணம் வழங்காமல் ராக்கெட்டின் எரிபொருள் டேங்கரை எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-03 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் கடலில் மீன்பிடித்தபோது அவர்களது வலையில் இரும்பினால் ஆன உருளை வடிவம் கொண்ட மர்ம பொருள் சிக்கியது. அந்த மர்ம பொருளை மீனவர்கள் கட்டி இழுத்து கடற்கரைக்கு கொண்டுவந்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறையினரும் அங்கு விரைந்து வந்தனர். அதன்பின்னரே அந்த மர்ம பொருள் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் உந்துசக்தி மோட்டார் (பூஸ்டர்) மற்றும் எரிபொருள் டேங்க் என்பதும் தெரியவந்தது.

வெடிக்கும் தன்மையுடையது

இதைத்தொடர்ந்து இந்த தகவல் இஸ்ரோவுக்கும் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் இஸ்ரோ அதிகாரிகள் 4 பேர் நேற்று புதுவை வந்தனர்.

அவர்கள் வந்ததும் அவர்கள் அந்த டேங்கரில் இருந்து வெடிக்கும் சக்தியுடைய பொருட்களை கழற்றி அப்புறப்படுத்தினார்கள். மேலும் ஒரு பாகமும் காணாமல் போயிருந்தது. அதுவும் வெடிக்கும் தன்மையுடையது என்பதால் யாராவது எடுத்திருந்தால் கொடுத்து விடுமாறும் அறிவுறுத்தினார்கள்.

படுத்து போராட்டம்

இநதநிலையில் அந்த டேங்கரை எடுத்து செல்ல லாரியும் அங்கு வந்தது. அதுமட்டுமின்றி கிரேன் ஒன்றும் கொண்டுவரப்பட்டது. ஆனால் அதை தூக்க மீனவர்கள் அனுமதிக்கவில்லை.

டேங்கரை இழுத்து வந்ததால் தங்களது வலை, படகுகள் சேதமடைந்ததாகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் கூறி கிரேன் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இழப்பீடு

அங்கு தொகுதி எம்.எல்.ஏ.வான அன்பழகனும் வந்தார். சம்பவ இடத்துக்கு துணை கலெக்டர் சுதாகர், தாசில்தார் ராஜேஷ்கண்ணா ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களிடம் மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ.வும் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் இஸ்ரோ அதிகாரிகள் குழுவினரிடம் பேசினார்கள். ஆனால் அவர்கள் இழப்பீடு தருவது தொடர்பாக உறுதி எதுவும் அளிக்கவில்லை.

ரூ.3 லட்சம்

இதனால் எந்த முடிவும் எட்டப்படாமல் மீனவர்களின் போராட்டம் தொடர்ந்து. இதைத்தொடர்ந்து அன்பழகன் எம்.எல்.ஏ., முதல்-அமைச்சர் நாராயணசாமியை தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது ரூ.3 லட்சம் முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து கிடைக்க ஏற்பாடு செய்வதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

அதன்பின் பிற்பகலில் கிரேன் மூலம் அந்த டேங்கரை லாரியில் ஏற்றிய இஸ்ரோ குழுவினர் அதை ஸ்ரீஹரிகோட்டாவுக்கு எடுத்து சென்றனர்.

மேலும் செய்திகள்