தென்னேரி, மணிமங்கலம் ஏரிகள் நிரம்பின - உபரிநீர் வெளியேற்றம்

தென்னேரி, மணிமங்கலம் ஏரிகள் நிரம்பின. இந்த ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேறுகிறது.

Update: 2019-12-04 22:15 GMT
வாலாஜாபாத், 

காஞ்சீபுரம் மாவட்டத்தின் மிகபெரிய ஏரியாக தென்னேரி ஏரி விளங்குகிறது. இந்த ஏரி மூலம் தென்னேரி, அகரம், கோவளவேடு, கட்டவாக்கம், திருவங்கரணை, அயிமிஞ்சேரி, மஞ்சமேடு, வாரணாசி, உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 858-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று பயனடையும் வகையில் பரந்து விரிந்து உள்ளது.

இந்த ஏரி முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி செலவில் கரைகள் பலப்படுத்தப்பட்டு, கலங்கல்கள், மதகுகள் சீரமைக்கப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழை காரணமாக தென்னேரி ஏரி தனது முழு கொள்ளளவான 18 அடியை எட்டியது.

இதன் காரணமாக தென்னேரி ஒடந்தாங்கல் பகுதியில் உள்ள கலங்கல்கள் வழியாக உபரி நீர் வெளியேற தொடங்கியது. தென்னேரி மஞ்சமேடு தரைப்பாலத்தில் ஏரியின் வெள்ளம் செல்வதால் வாலாஜாபாத்தில் இருந்து தென்னேரி வழியாக சுங்குவார்சத்திரம் செல்லும் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு பிறகு தென்னேரி ஏரி நிரம்பியதால் விவசாயத்தை நம்பியுள்ள தங்களின் வாழ்வாதாரம் சிறக்கும் என சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. மழையின் காரணமாக படப்பையை அடுத்த மணிமங்கலம் பெரிய ஏரி முழுவதும் நிரம்பி உள்ளது. ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் ஏரியின் உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேறுகிறது. இதனை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிறுவர்கள், பொதுமக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். செல்பி எடுத்தும் குளித்தும் மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்