கழிவுநீர் இணைப்புக்கு பள்ளம் தோண்ட அனுமதி வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி என்ஜினீயர் கைது

வீட்டுக்கு கழிவுநீர் இணைப்பு பெற சாலையில் பள்ளம் தோண்ட அனுமதி வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி என்ஜினீயரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர்.

Update: 2019-12-04 23:15 GMT
பெரம்பூர், 

சென்னை கொடுங்கையூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் நரேந்திரபாபு (வயது 62). இவர், தனது வீட்டுக்கு கழிவுநீர் இணைப்பு வழங்கும்படி குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் மனு அளித்தார். அதற்கு குழாய்கள், பதிக்க சாலையை பள்ளம் தோண்டும் என்பதால் அதற்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற்று வரும்படி கூறினர்.

இதையடுத்து கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகரில் உள்ள சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட 34-வது வார்டு அலுவலகத்தில் கழிவுநீர் இணைப்புக்காக சாலையில் பள்ளம் தோண்ட அனுமதி கோரினார். ஆனால் அனுமதி வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டார்.

இதுபற்றி அந்த வார்டின் மாநகராட்சி உதவி என்ஜினீயரான அம்பத்தூரை சேர்ந்த மணிகண்டன் (37) என்பவரிடம் நரேந்திரபாபு கேட்டார். அதற்கு மணிகண்டன், தனக்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் கொடுக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத நரேந்திரபாபு, இதுபற்றி சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். மணிகண்டனை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்ட லஞ்ச ஒழிப்புதுறையினர், ரசாயனபொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை அவரிடம் கொடுத்து, மணிகண்டனிடம் முதல் தவணையாக அந்த பணத்தை கொடுக்கும்படி அறிவுறுத்தினர்.

அதன்படி நரேந்திரபாபு, ரசாயனபொடி தடவிய ரூ.10 ஆயிரத்தை நேற்று மாநகராட்சி என்ஜினீயர் மணிகண்டனிடம் கொடுத்தார். அதை அவர் கையில் வாங்கியதும், அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு உதவி கமிஷனர் குமரகுரு தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மலர்கொடி, செந்தில்குமார் மற்றும் போலீசார் பாய்ந்து சென்று மணிகண்டனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

பின்னர் வார்டு அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர், அங்கிருந்த முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். பின்னர் கைதான மணிகண்டனை சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்