சூடானில் பலியான நாகை வாலிபரின் உடலை மீட்டுத்தர வேண்டும் கலெக்டரிடம், பெற்றோர் கோரிக்கை

சூடானில், நாகை வாலிபர் பலியானதாக உடன் தங்கியிருந்தவர் தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் இறந்தாரா? என்பதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கி உள்ளது. அவருடைய உடலை மீட்டுத்தர வேண்டும் என பெற்றோர், கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-12-07 23:00 GMT
நாகப்பட்டினம்,

சூடான் நாட்டில் இயங்கி வரும் ‘செராமிக்’ தொழிற்சாலை ஒன்றில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தொழிற்சாலையில் கியாஸ் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 18 பேர் இந்தியர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த கோர விபத்தில் அந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே உள்ள ஆலங்குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த ராமகிரு‌‌ஷ்ணன்(வயது25) என்பவரும் பலியானதாக அவருடைய பெற்றோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் கட்ட தகவல்கள் வந்தன. இதன் காரணமாக அவருடைய உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

‘வீடியோ’ காட்சியால் குழப்பம்

இந்த நிலையில் ராமகிரு‌‌ஷ்ணனின் சகோதரர் பிரபாகரனின் செல்போனுக்கு வந்த ‘வீடியோ’ ஒன்றில் தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் இருந்து ராமகிரு‌‌ஷ்ணன் வெளியேறுவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதை பார்த்த ராம கிரு‌‌ஷ்ணனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவர் இறந்து விட்டாரா? அல்லது வேறு இடத்தில் தங்கி உள்ளாரா? என குழப்பம் அடைந்தனர்.

இதுதொடர்பாக நாகை கலெக்டர் பிரவீன்நாயரிடம் மனு அளித்த பெற்றோர், ராமகிரு‌‌ஷ்ணனின் கதி என்ன? என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

குழப்பம் நீங்கியது

இந்த நிலையில் சூடானில் ராமகிரு‌‌ஷ்ணன் இறந்து விட்டதாக அவருடன் தங்கி இருந்த ஒருவர் அவருடைய பெற்றோருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவருடைய சாவில் ஏற்பட்ட குழப்பம் நீங்கி உள்ளது.

அவருடைய உடலை சூடானில் இருந்து மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடைய உறவினர்கள், ஆலங்குடிச்சேரி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாகை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

சூடான் நாட்டில் ராமகிரு‌‌ஷ்ணன் வேலை பார்த்து வந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அவர் இறந்து விட்டாரா? இல்லையா? என்பது தொடர்பான குழப்பத்திலும், பரிதவிப்பிலும் இருந்து வந்தோம்.

உடலை மீட்க வேண்டும்

இந்த நிலையில் ராமகிரு‌‌ஷ்ணனின் அறையில் தங்கியிருந்த ஒருவரிடம் இருந்து ‘வாட்ஸ் அப்பில்’ குரல் பதிவு குறுந்தகவல் (வாய்ஸ் மெசேஜ்) வந்துள்ளது. அதில் ராமகிரு‌‌ஷ்ணன் இறந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அரசு தரப்பில் எங்களிடம் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ராமகிரு‌‌ஷ்ணனின் உடலை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்