கடலூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கை - அதிகாரிகளுக்கு கலெக்டர் அருண் உத்தரவு

இந்த மாதம் 31-ந்தேதிக்குள் கடலூர் சாலையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அருண் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2019-12-08 22:30 GMT
புதுச்சேரி, 

புதுவை - கடலூர் சாலையில் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை முதல் ரோடியர் மில் ரெயில்வே கேட் பகுதி வரை நாள்தோறும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த பகுதியில் திருமண மண்டபம், பள்ளிக்கூடம், வணிக வளாகம், ஆஸ்பத்திரி, ஒருங்கிணைந்த கோர்ட்டு உள்ளிட்டவை உள்ளன.

இதனால் அங்கு வந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண கடந்த செப்டம்பர் மாதம் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கனரக வாகனங்களை அப்புறப்படுத்துதல், 2 சக்கர வாகனங்களுக்கு பார்க்கிங் வசதி செய்து கொடுத்தல் என்பன போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் அதன்படி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் முடிவுகளை அமல்படுத்த கலெக்டர் அருண் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி பொதுப்பணித்துறை சார்பில் சாலையில் சென்டர் மீடியன் அமைப்பது, மின்துறையினர் தற்போதுள்ள மின் கம்பங்களை அகற்றி பொதுப்பணித்துறை மூலம் அமைக்கப்படும் சென்டர் மீடியனில் மின்கம்பங்களை நிறுவி மின்விளக்கு வசதி செய்து கொடுப்பது, ரோட்டின் மேற்குப்பகுதியில் பார்க்கிங் வசதியை நகராட்சி நிர்வாகம் ஏற்படுத்துவது போன்றவற்றை செய்ய வேண்டும்.

இந்த பணிகள் அனைத்தையும் இந்த மாதம் 31-ந்தேதிக்குள் செய்துமுடிக்கப்பட வேண்டும் என்று அவர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்