மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி - கலெக்டர் வழங்கினார்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடந்தது. மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி கலெக்டர் வழங்கினார்.

Update: 2019-12-10 22:15 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் மக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். மேலும் இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியத்தொகை, வீட்டுமனை பட்டா, பசுமை வீடுகள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 200 மனுக்களை பெற்று மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்களை வழங்கினார்.

மேலும் வருவாய்த்துறை சார்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 4 பேருக்கு முதியோர் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும், ஒருவருக்கு ஆதரவற்ற விதவை சான்றிதழையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.7 ஆயிரத்து 500 மதிப்புள்ள சிறப்பு சக்கர நாற்காலியையும் கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சுந்தரமூர்த்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாலதி, உதவி ஆணையர் (கலால்) ஜீவா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்