தமிழகத்திற்கு 500 டன் எகிப்து வெங்காயம் வருகிறது அமைச்சர் காமராஜ் தகவல்

தமிழகத்திற்கு 500 டன் எகிப்து வெங்காயம் வருகிறது என்று அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2019-12-11 23:00 GMT
கொரடாச்சேரி,

கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருந்து வருகிறது. வெங்காய விலை உயர்வு குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் கொடுத்த அறிக்கை ஒரு மாயையான அறிக்கை. 2 மாதங்களுக்கு முன்பு இருந்தே வெங்காய விலை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

படிப்படியாக வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது. 2010-ம் ஆண்டு வெங்காயத்தின் விலை ரூ.160 வரை விற்றது. அப்போது தி.மு.க. ஆட்சியில் இருந்தது. அப்போது விலை ஏற்றத்திற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?. அப்போது 5 கடைகளில் மட்டுமே குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்தார்கள். ஆனால் தமிழக அரசு பசுமை பண்ணை கடைகளில் ரூ.40-க்கு தற்போது வரை தொடர்ந்து வெங்காயத்தை விற்று வருகிறோம்.

6 ஆயிரம் ரே‌‌ஷன் கடைகளில்

எகிப்து நாட்டில் இருந்து வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்கிறது. இதில் தமிழகத்திற்கு ஆயிரம் டன் வெங்காயம் கேட்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இன்னும் 2 நாட்களில் 500 டன் வெங்காயம் தமிழகத்திற்கு வந்து விடும். அதை மானிய விலையில் கொடுக்க தமிழக அரசு தயாராக உள்ளது. மேலும் தமிழகத்தில் 6 ஆயிரம் ரே‌‌ஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அ.தி.மு.க. என்றைக்கும் மக்களை விட்டு விலகி போகாது. தி.மு.க.வை தான் மக்கள் விலக்கி வைத்துள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தவுடன் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என ஸ்டாலின் கூறினார். அடுத்த நாளே தேர்தலை நடத்த கூடாது என தி.மு.க. உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அ.தி.மு.க. தேர்தலுக்கு எப்பொழுதும் தயாராக உள்ளது. தி.மு.க. உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சி செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்