வரத்து இல்லாததால் முருங்கைக்காய் கிலோ ரூ.300-க்கு விற்பனை

வரத்து இல்லாததால் ஒரு கிலோ முருங்கைக்காய் மொத்த மார்க்கெட்டில் ரூ.300-க்கு விற்பனை ஆகிறது.

Update: 2019-12-12 22:45 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக முருங்கைக்காய் வரத்து முற்றிலும் இல்லை. இதன் காரணமாக அதன் விலை ‘கிடுகிடு’வென உயர தொடங்கியது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல மடங்கு முருங்கைக்காயின் விலை அதிகரித்து இருக்கிறது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த வாரத்தில் ஒரு கிலோ முருங்கைக் காய் ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர், விலை சற்று குறைய தொடங்கியது. நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.200-க்கு விற்பனையானது.

இந்தநிலையில் வரத்து இல்லாததால் நேற்று ஒரே நாளில் முருங்கைக்காய் விலை கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து இருக்கிறது. குஜராத்தில் இருந்து தான் தற்போது முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது. விலை உயர்வால், முதல்தர முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ.300-க்கும், 2-ம் தரம் ரூ.100 முதல் ரூ.150 வரையிலும் மொத்த மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதுவே வெளிமார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.400 வரை விற்கிறார்கள்.

வெங்காயம் விலை குறைகிறது

கடந்த வாரம் வரை உச்சத்தில் இருந்த பல்லாரி வெங்காயத்தின் விலை தற்போது குறைய தொடங்கி இருக்கிறது. ஒரு கிலோ ரூ.200 வரை விற்ற வெங்காயம், நேற்று முன்தினம் ரூ.140-க்கு(முதல் தரம்) விற்கப்பட்டது. நேற்று அதன் விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிலோ பல்லாரி வெங்காயம் ரூ.130-க்கு(முதல் தரமான நாசிக்) விற்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடகா வெங்காயம் ரூ.100-க்கும், ஆந்திரா வெங்காயம் ரூ.80-க்கும், எகிப்து வெங்காயம் ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

மராட்டியம், கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து தற்போது 50 லாரிகளில் வெங்காயம் வரத்தொடங்கி இருப்பதாலும், வெளிநாட்டு வெங்காயம் வரத்து இருப்பதாலும் அதன் விலை குறைய தொடங்கி இருப்பதாக கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்