மனைவி கண் எதிரே விபத்தில் சிக்கிய ஜவுளிக்கடை ஊழியர் பரிதாப சாவு

மனைவி கண் எதிரே விபத்தில் சிக்கிய ஜவுளிக்கடை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-12-13 22:45 GMT
மலைக்கோட்டை, 

திருச்சி மேலதேவதானம் பகுதியை சேர்ந்தவர் இளங்கன்மாரிமுத்து(வயது 52). இவர், திருச்சி சத்திரம் தெப்பக்குளம் அருகே உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வயலூர் ரோடு வாசன்நகர் 7-வது குறுக்கு தெருவுக்கு அவர் குடிபெயர்ந்தார்.

இதைத்தொடர்ந்து தினமும் வாசன்நகர் பஸ் நிறுத்தத்தில் இருந்து அவர் பஸ்சில் வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு ஜவுளிக்கடையில் வேலை முடிந்து இளங்கன் மாரிமுத்து வீட்டுக்கு பஸ்சில் சென்று ்கொண்டிருந்தார். இதற்கிடையே வாசன்நகர் பஸ் நிறுத்தப்பகுதியில் உள்ள கடையில் வீட்டு சாமான்கள் வாங்குவதற்காக அவர் தனது மனைவி அமிர்தவல்லியை, அங்கு வருமாறு கூறியிருந்தார். அதன்படி அமிர்தவல்லி அங்கு வந்து, கடை அருகே காத்திருந்தார்.

இ்ந்நிலையில் வாசன்நகர் பஸ் நிறுத்தத்தில் பஸ் நின்றதும், இளங்கன்மாரிமுத்து இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உயிருக்கு போராடினார். இதைக்கண்ட அமிர்தவல்லி, கணவர் அருகே ஓடோடி வந்து கதறி அழுதார். இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட இளங்கன் மாரிமுத்து, அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், ராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் உயிரிழந்த இளங்கன்மாரிமுத்துவுக்கு ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்