தஞ்சையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம் - 16 பேர் கைது

தஞ்சையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-13 22:13 GMT
தஞ்சாவூர்,

மத்தியஅரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை முன்பு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சண்.ராமநாதன் தலைமை தாங்கினார்.

நகர துணைச் செயலாளர்கள் நீலகண்டன், சிந்தனை செல்வன், துணை அமைப்பாளர்கள் சுரே‌‌ஷ், செந்தில்குமார், முகிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 5 பெண்கள் உள்பட 75 பேர் பங்கேற்று குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து கோ‌‌ஷங்கள் எழுப்பியதுடன், அந்த மசோதா நகலை கிழித்து வீசினர்.

அப்போது நகலை பறிப் பதற்கு போலீசார் முயற்சி செய்தனர். இதனால் இளைஞரணி நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இளைஞரணியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்கள் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு கைதாகாமல் கலைந்து சென்றுவிட்டனர்.

மேலும் செய்திகள்