திண்டுக்கல்லில் கொட்டித்தீர்த்த மழை: சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி

திண்டுக்கல்லில் நேற்று பகல் முழுவதும் கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

Update: 2019-12-14 22:00 GMT
திண்டுக்கல், 

திண்டுக்கல்லில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே திண்டுக்கல்லில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதுமட்டுமின்றி குளிர்காற்றும் வீசியது. இதனால் திண்டுக்கல் நகர மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சூரியனின் முகம் தெரியாத அளவுக்கு பகல் முழுவதும் வானத்தை கார்மேக மூட்டம் ஆக்கிரமித்தது. இடைவிடாது மழை பெய்தது. சில மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் முக்கிய வீதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

திண்டுக்கல் கூட்டுறவு நகரில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. அதில் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்.

சாலையில் தேங்கியிருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தப்படி வாகனங்கள் சென்றன. சிலருடைய வாகனங்கள் பள்ளத்தில் சிக்கிக்கொள்வதையும் காண முடிந்தது. பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தற்போது நடந்து வருகிறது. தேர்வு முடிந்து மதியம் வீட்டுக்கு புறப்பட்ட மாணவ-மாணவிகள் குடை பிடித்தபடியே நடந்து சென்றனர். சிலர் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

இதேபோல் உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஒரு நாள் மட்டுமே இருப்பதால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளர்கள் நேற்று குவிந்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக வந்தவர்கள், குடை பிடித்தபடியே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு காத்திருந்தனர். திண்டுக்கல் காந்திமார்க்கெட் பகுதி மழை காரணமாக சகதிகாடாக மாறியது. மழை காரணமாக திண்டுக்கல்லில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்