சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதை கண்டித்து: விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்-பரபரப்பு மைசூரு-ஊட்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதை கண்டித்து மைசூருவில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்காரணமாக மைசூரு-ஊட்டி சாலையில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-12-14 22:15 GMT
மைசூரு,

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து நேற்று மைசூரு அருகே நஞ்சன்கூடு சாலையில் கே.என்.உண்டி கிராமத்தில் உள்ள சுங்கச்சாவடி முன்பு பல்வேறு விவசாய அமைப்புகள், தலித் அமைப்பினர் உள்பட பல்வேறு அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

அப்போது அவர்கள், வாகனங்களை வாங்கும்போதே சாலை வரி, சுங்கவரி, சர்வீஸ் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஜி.எஸ்.டி. கட்டணம், பஸ்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், சுங்கச்சாவடிகளிலும் தனியாக கட்டணம் வசூலிக்கிறார்கள். ஆனாலும் சாலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமாக உள்ளது என்று கூறினார்கள். மேலும் அவர்கள் சாலையில் அமர்ந்தே உணவு உண்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகளின் இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டத்தால் மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் பல மணி நேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்