கந்தம்பாளையம் அருகே வெடிபொருட்கள் பறிமுதல்; தர்மபுரியை சேர்ந்தவர் கைது

கந்தம்பாளையம் அருகே, வெடிபொருட்கள் பறி முதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தர்ம புரியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-12-14 23:00 GMT
கந்தம்பாளையம்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டம் கந்தம்பாளையம் அருகே சித்தம்பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட சுள்ளிபாளையம் என்ற கிராமத்தில் உள்ள கல் குவாரியில் கடந்த 3 ஆண்டுகளாக கல் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்த கல் குவாரியில் அனுமதியின்றி எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு இதன் பேரில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

தர்மபுரியை சேர்ந்தவர் கைது

இதையடுத்து பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி பரிந்துரையின்பேரில், நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவஹர் மற்றும் போலீசார் அந்த கல் குவாரியில் சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கு எலட்க்ரானிக் டெட்டனேட்டர் 184, திரி 34 காயில், சாதா டெட்டனேட்டர் 615, வெடிக்க பயன்படுத்தும் 66 வயர்கள் உள்ளிட்டவை அனுமதியில்லாமல் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இவற்றின் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆகும். இந்த வெடி பொருட்கள் மற்றும் அங்கு இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த கல் குவாரியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த தர்மபுரி மாவட்டம் எல்லபுடையான்பட்டியை சேர்ந்த ராஜசேகரன் (வயது 35) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்