கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீட்டு தொகையை அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

பல்லடம் அருகே உயர்மின்கோபுர பாதைக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு இழப்பீட்டு தொகையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினார்கள்.

Update: 2019-12-14 22:45 GMT
பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள செம்மிபாளையத்தில் விவசாய விளை நிலத்தின் வழியாக உயர்மின் கோபுர பாதை அமைக்கும் பணியை நேற்று முன்தினம் பவர்கிரீட் நிறுவனத்தினர், வருவாய் துறை மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொண்டனர். இதற்கு அந்த பகுதியை சேர்ந்த குமாரசாமி, கோவிந்தசாமி உள்ளிட்ட 8 விவசாயிகள் உயர்மின் கோபுர பாதை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி தங்களது விளை நிலத்திற்கு இழப்பீட்டு தொகை எவ்வளவு தருவீர்கள்? என்பதை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து பவர்கிரீட் நிறுவனத்தினர் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினையில் தீர்வு பெறலாம் என ஆலோசனை வழங்கினர். இந்த நிலையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை பல்லடம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு பல்லடம் தாசில்தார் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் செம்மிபாளையம் விவசாயிகள் குமாரசாமி,கோவிந்தசாமி, தேவராஜ்,குமார், விஸ்வநாதன்,வெங்கிடுசாமி,வேலுசாமி மற்றும் உயர்மின் கோபுர திட்ட எதிர்ப்பு விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் வக்கீல் ஈசன், சண்முகசுந்தரம், பழனிசாமி, மற்றும் பவர்கிரீட் நிறுவனத்தினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் உயர்மின்கோபுர பாதைக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு கோவை மாவட்டத்தை போல் முன்கூட்டியே வெளிப்படையாக திருப்பூர் மாவட்ட கலெக்டர்,மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் இழப்பீட்டு தொகையை அறிவிக்க வேண்டும்.மேலும் வெளிமார்க்கெட் அடிப்படையில் அதிகமாக இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். அதனை எப்போது வழங்கப்படும் என்ற காலக்கெடு நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் தான் விளை நிலத்தில் உயர்மின் கோபுரபாதை அமைக்கும் பணி தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். விவசாயிகளின் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த பிரச்சினை குறித்து நடவடிக்கை மேற்கொள்வார் என்று பல்லடம் தாசில்தார் சிவசுப்பிரமணியம் தெரிவித்தார். அதுவரை உயர்மின் கோபுர பாதை அமைக்கும் பணி மேற்கொள்ளக்கூடாது என்று விவசாயிகள் வருவாய் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

மேலும் செய்திகள்