திருப்பூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி

திருப்பூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

Update: 2019-12-14 22:56 GMT
கோவை,

திருப்பூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள்.


இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது :-

திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் டி.கே.எஸ்.நகரை சேர்ந்தவர் குமார் (வயது39). டெய்லர். இவருடைய மனைவி சாந்தினி. இவர்களுடைய மகள்கள் ரூபிகா (12) 7-ம் வகுப்பும், அஷ்விகா (7) 2-ம் வகுப்பும் படித்தனர்.

அஷ்விகா கடந்த 1-ந் தேதி கடும்காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். இதற்காக அவளை பெற்றோர் காங்கேயம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை.

இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அஷ்விகாவை சேர்த்தனர். அங்கு நடத்திய பல்வேறு கட்ட பரிசோதனையில் அஷ்விகாவுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அஷ்விகா கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். அங்கு சிறுமியை டாக்டர்கள் தனிவார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று நண்பகல் 12 மணியளவில் அஷ்விகா பரிதாபமாக இறந்தாள். சிறுமியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய செய்வதாக இருந்தது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு திருப்பூரை சேர்ந்த 26 பேரும், கோவையை சேர்ந்த 17 பேரும், ஈரோட்டை சேர்ந்த 2 பேரும் என மொத்தம் 45 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 35 பேர் குழந்தைகள் ஆவர். இவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்