கள்ளக்குறிச்சி அருகே, சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு பெண்கள் போராட்டம்

கள்ளக்குறிச்சி அருகே சேறும், சகதியுமான சாலையில் நாட்டு நட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-12-15 22:15 GMT
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே ரோடு மாமனந்தல் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் கழிவுநீர் வாய்க்கால் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் சாலையில் வழிந்து ஓடு கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்கள் தெருவில் சிமெண்டு சாலை அமைப்பதோடு, கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் எனக் கோரி அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை மனு அளித்தனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் சாலை மேலும் பலத்த சேதமடைந்து சேறும், சகதியுமாக மாறியது.

இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நாற்று நாட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், தங்களது தெருவில் முறையாக சிமெண்டு சாலை அமைத்து, கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும் எனக்கோரி கோ‌‌ஷங்களை எழுப்பினர். பின்னர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று கூறிவிட்டு அங்கிருந்து பெண்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்