அரக்கோணத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை - பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கும்பல் வெறிச்செயல்

அரக்கோணத்தில் வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கொலையின் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-15 23:45 GMT
அரக்கோணம், 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம், நன்னுமீரான்சாயபு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் பிரவீன் (வயது 24). இவர் மார்க்கெட் அருகே டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. பிரியங்கா (22) என்ற மனைவியும், தியாபிரசி (1) என்ற மகளும் உள்ளனர். பிரவீன் சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். இவர் நேற்று இரவு 7.45 மணி அளவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகே உள்ள ஒரு கடை முன்பாக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அருகே உள்ள அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் ஓடி வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பிரவீனின் தலை, வயிறு, கை என உடலில் பல இடங்களில் சரமாரியாக வெட்டினர். பின்னர் அவர்கள் ரெயில் நிலையம் செல்லும் வழியாக தப்பிச் சென்றுவிட்டனர். படுகாயமடைந்த பிரவீன் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக இறந்தார்.

இதைப்பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அந்த பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகள் உடனடியாக அடைக்கப்பட்டன. இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு கே.மனோகரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தகவல் அறிந்த பிரவீனின் உறவினர்கள், நண்பர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அரசு மருத்துவமனை முன்பாக குவிந்தனர். ஆகவே போலீசார் பிரவீனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து அரக்கோணம் அரசு மருத்துவமனை முன்பாக குவிந்து இருந்தவர்களை போலீசார் கலைத்தனர். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை நடந்த பகுதியில் உள்ள கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். கேமராவில் பதிவாகி உள்ள வீடியோ பதிவுகளை வைத்து மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மர்மநபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் உத்தரவின்பேரில் அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முத்துராமலிங்கம், அண்ணாத்துரை, வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

அரக்கோணத்தில் இருந்து காஞ்சீபுரம், வேலூர், சோளிங்கர், திருத்தணி, திருவள்ளூர் செல்லும் சாலைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு கே.மனோகரன் கூறுகையில், பிரவீன் எதற்காக கொலை செய்யப்பட்டார்?, முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் கொலையாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.

மேலும் செய்திகள்