திருவண்ணாமலையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் -கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலையில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி முகாமை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தொடங்கி வைத்தார்

Update: 2019-12-15 22:45 GMT
திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.கதிர்சங்கர் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும், ஊராட்சி ஒன்றிய ஆணையாளருமான தி.அண்ணாதுரை வரவேற்றார்.

இதில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசுகையில், தேர்தல் விதிகளுக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடும்போது பதற்றம் கூடாது. நேர்மையாக பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான ஆர்.ஆனந்தன் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார். இதில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆகியோர் பயிற்சி பெற்றனர்.

இதேபோல் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

மேலும் செய்திகள்