சரக்கு மற்றும் சேவை வரிக்கான இழப்பீடு ரூ.380 கோடியை மத்திய அரசு தரவில்லை - நாராயணசாமி புகார்

சரக்கு மற்றும் சேவை வரியில் ஏற்பட்ட இழப்பீடு ரூ.380 கோடியை மத்திய அரசு தரவில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

Update: 2019-12-17 00:01 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்திய அரசின் திறமையின்மையால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு, பொருளாதார வளர்ச்சி சரிவு ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் போராட்டம் நடந்தது. இதில் நானும், அமைச்சர்களும், நிர்வாகிகளும் கலந்துகொண்டோம். மத்திய அரசின் தவறான கொள்கையினால் நாடு முழுவதும் தற்போது கலவரம் நடந்து வருகிறது.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருளாதார மந்த நிலையால் மாநில வரி வருவாய் குறைந்துள்ளது. புதுவையில் வாகன விற்பனை குறைந்ததால் வரி வருவாயும் குறைந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியில் நமக்கு தரவேண்டிய இழப்பீடு 14 சதவீத நிதியை மத்திய அரசு கடந்த 5 மாதமாக தரவில்லை. அதாவது ஆகஸ்டு முதல் நவம்பர் வரை 2 மாதத்துக்கு ஒருமுறை இழப்பீடு தரவேண்டும். ஆனால் 4 மாதத்துக்கு ரூ.380 கோடி கிடைக்காமல் உள்ளது.

இந்த நிதியை தரக்கோரி ஏற்கனவே புதுவை, கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், சத்தீஷ்கர், மேற்கு வங்காள மாநில அமைச்சர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினேன்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் ஷாஜகான் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமனை சந்தித்து நிதி தரக்கோரி வலியுறுத்தினார். அதன் பின்னரும் மத்திய அரசு நிதி வழங்கவில்லை.

இந்தநிலையில் தற்போதும் பிற மாநில மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினேன். அப்போது நாளை நடைபெறும் சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டத்தில் இந்த பிரச்சினையை எழுப்ப உள்ளோம்.

இவ்வளவு பிரச்சினை இருந்தும் இதற்கு முன் முதல்-அமைச்சராக ரங்கசாமி இருந்தபோது வாங்கிய கடன் மற்றும் வட்டித் தொகையாக ரூ.800 கோடியை திருப்பி செலுத்தி உள்ளோம். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-

தற்போது அசாம், மேற்கு வங்காளம், மேகாலயா, திரிபுரா மாநிலங்கள் பற்றி எரிகிறது. மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவந்து மக்களின் அமைதியை குலைத்து உள்ளது. பெரும்பான்மை உள்ளதால் 2 அவைகளிலும் நிறைவேற்றி உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்கள் தற்போது மாணவர்கள் மத்தியிலும் பரவி உள்ளது. உள்துறை மந்திரி தேவைப்பட்டால் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவோம் என்று கூறியுள்ளார்.

நான் டெல்லி சென்றிருந்தபோது புதுச்சேரிக்கு வருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தேன். அதை ஏற்று வருகிற 23-ந்தேதி புதுச்சேரிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வருகிறார். அன்றைய தினம் இரவு புதுவையில் தங்குகிறார். புதுச்சேரி, காரைக்காலில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்