ஊட்டி-கோத்தகிரி சாலையில், தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரம்

ஊட்டி-கோத்தகிரி சாலையில் தடுப்புச்சுவர் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2019-12-18 22:15 GMT
ஊட்டி,

மலைப்பிரதேசமான ஊட்டியில் அனைத்து சாலைகளும் ஏற்ற, இறக்கங்களாக உள்ளது. வனப்பகுதிகள் வழியே சாலை வளைந்து, நெளிந்து செல்கிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஊட்டியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கிறது. அதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைகின்றனர். மேலும் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல நீண்ட நேரம் ஆகியது.

இதனை கருத்தில் கொண்டு கோடை சீசனின் போது ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம், கோவைக்கு செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டு வருகிறது.

மேலும் ஊட்டியில் உள்ள ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா மலைசிகரம், தேயிலை பூங்கா மற்றும் கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட செல்கின்றனர். இதனால் ஊட்டி-கோத்தகிரி சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதுதவிர நகர, கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

ஊட்டி-கோத்தகிரி சாலை மேல்கோடப்பமந்து பகுதி அருகே குறுகிய வளைவுகளாக இருந்தன. புதியதாக வாகனங்களை ஓட்டி வருபவர்கள் திருப்ப முடியாமல் விபத்தில் சிக்கும் அபாயம் இருந்தது. மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு வளைவுகள் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்தி பசுமையான தேயிலை தோட்டங்களை கண்டு ரசிப்பதால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர்.

இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், கோட்ட பொறியாளர் உத்தரவின்படி, உதவி பொறியாளர் மேற்பார்வையில் குறுகிய வளைவுகளில் வாகனங்கள் எளதில் செல்லும் பொருட்டு ஊட்டி-கோத்தகிரி சாலையை அகலப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் மண் வெட்டி அகற்றப்பட்டது.

200 மீட்டர் நீளத்துக்கு சாலை அகலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த இடத்தில் மலைகுன்றுகள் உயரமாக இருப்பதால், மண்சரிவு ஏற்படாமல் இருக்க 3 மீட்டர் உயரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. கான்கிரீட் கலவை எந்திரத்தில் இருந்து கான்கிரீட் பொக்லைன் எந்திரம் மூலம் கொட்டப்பட்டு தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் மண்சரிவு ஏற்படுவது தடுக்கப்படுவதோடு, சாலை அகலப்படுத்தப்பட்டு உள்ளதால் வாகனங்கள் எளிதில் திரும்பி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதனால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்