சாந்தநாதசுவாமி கோவிலில் பஞ்சமூர்த்தி வீதி உலா திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

புதுக்கோட்டையில் உள்ள சாந்தநாதசுவாமி கோவிலில் நேற்று பஞ்ச மூர்த்தி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-12-19 22:30 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கீழராஜ வீதியில் வேதநாயகி அம்மன் சமேத சாந்தநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் உலகில் உள்ள உயிர்கள் வாழ்வதற்காக மார்கழி மாத தேய்பிறை அ‌‌ஷ்டமி நாளன்று சிவன் படி அளக்கும் நிகழ்ச்சி மற்றும் பஞ்ச மூர்த்தி வீதிஉலாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நகரத்தார் சார்பில் மார்கழி மாத தேய்பிறை அ‌‌ஷ்டமி நாளன்று சிவன் படி அளக்கும் நிகழ்ச்சியும் மற்றும் பஞ்ச மூர்த்தி வீதிஉலாவும் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து சாந்தநாத சுவாமி கோவிலில் உள்ள விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, வேதநாயகி சமேத சாந்தநாதசுவாமி, வேதநாயகி அம்மன், தண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து பக்தர்கள் படி அரிசி வழங்கி வழிபாடு செய்தனர்.

பஞ்சமூர்த்தி வீதிஉலா

இதைத்தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, வேதநாயகி சமேத சாந்தநாதசுவாமி, வேதநாயகி அம்மன், தண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு பஞ்சமூர்த்தி மலர் அலங்காரம் செய்யப் பட்டது. இதைத்தொடர்ந்து விநாயகர் மூஞ்சுறு வாகனத்திலும், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், வேதநாயகி சமேத சாந்தநாதசுவாமி வெள்ளி ரி‌‌ஷப வாகனத்திலும், வேதநாயகி அம்மன் ரி‌‌ஷப வாகனத்திலும், தண்டிகேஸ்வரர் சுவாமி ரி‌‌ஷப வாகனத்திலும் எழுந்தருள செய்தனர். இதைத் தொடர்ந்து பஞ்ச மூர்த்தி வீதிஉலா நடைபெற்றது. இந்த வீதிஉலா பெரிய கடை வீதி, மேலராஜ வீதி, வடக்கு ராஜ வீதி, கீழ ராஜ வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், நகரத்தார்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்