நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தால் ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன - கலெக்டர் ‌ஷில்பா தகவல்

நெல்லை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தால் அனைத்து ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளதாக, கலெக்டர் ‌ஷில்பா தெரிவித்தார்.

Update: 2019-12-19 23:00 GMT
நெல்லை, 

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை அடுத்த கரம்பை கிராமத்தில் உழவர் வயல் வெளி பள்ளி பயிற்சி நேற்று நடந்தது. அந்த பகுதியில் திருந்திய நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அவற்றை நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா நேற்று பார்வையிட்டார்.

அப்போது அவர் விவசாயிகளிடம் கூறியதாவது:-

உலக வங்கி மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன் நீர்வள நிலவளத் திட்டத்தில் நெற்பயிர் சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில் நுட்பங்களை விவசாயிகள் தெரிந்து கொள்வதற்காக உழவர் வயல்வெளி பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு பூச்சி நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பது எப்படி என்று விளக்கம் அளிக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்ட குடிமராமத்து திட்டத்தால் 185 ஏரி குளங்கள், 503 ஊரக பகுதி குளங்களும் தூர்வாரப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து ஏரிகளும், குளங்களும் நிறைந்துள்ளன. 35 ஆயிரத்து 141 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

எந்திர நடவால் குறைந்த செலவில் அதிக லாபம் பெற முடியும். குறைந்த செலவு, குறைந்த ஆட்கள், குறைந்த நீர் கொண்டு விவசாயம் செய்யும் திருந்திய நெல் சாகுபடி முறையினை அனைத்து விவசாயிகளும் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ‌ஷில்பா கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் கிரு‌‌ஷ்ணபிள்ளை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்