சூறைக்காற்றால் கன்னியாகுமரியில் கடல் சீற்றம் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து

சூறைக்காற்றால் கன்னியாகுமரியில் நேற்று கடல் சீற்றமாக இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

Update: 2019-12-19 22:45 GMT
கன்னியாகுமரி,

புகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் என்பதால், வழக்கத்தை விட கன்னியாகுமரியில் கூட்டம் அதிகமாக உள்ளது.

அங்கு கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை பகுதிக்கு தினமும் காலை 8 மணியில் இருந்து மாலை 4 மணி வரை படகு போக்குவரத்து இயக்கப்படும். இந்தநிலையில் நேற்று காலையில் இருந்து கடலில் சூறைக்காற்று வீசியது. இதனால் கடல் சீற்றமாக இருந்தது. பல அடி உயரத்துக்கு எழும்பிய அலைகள் பாறைகள் மீது மோதி சிதறியது.

படகு போக்குவரத்து ரத்து

தொடர்ந்து கடல் சீற்றமாக இருந்ததால் நாள் முழுவதும் படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை. எனவே விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிடுவதற்காக காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதே சமயத்தில், எச்சரிக்கையும் மீறி யாரேனும் முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் குளிக்கிறார்களா? என போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து வந்தனர்.

மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

மேலும் சூறைக்காற்றால் கோவளம், ஆரோக்கியபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் வள்ளம், கட்டுமரபடகுகள்கடற்கரையோரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்