பொய்கையில் இருந்து ஆட்டோவில் ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது - 1¼ டன் பறிமுதல்

வேலூரை அடுத்த பொய்கையில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ஆட்டோவில் 1¼ டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்றவரை உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-20 22:15 GMT
வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் ரேஷன் அரிசியை கடத்தி சென்று ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலூரை அடுத்த பொய்கையில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்படுவதாக மாவட்ட வழங்கல் அலுவலர் அலுவலகத்துக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் பேபிஇந்திரா, பறக்கும்படை தாசில்தார் சரவணன் மற்றும் அலுவலர்கள் பொய்கை அன்பூண்டி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ஆட்டோவை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், பிளாஸ்டிக் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிகாரிகள் பிரித்து சோதனையிட்டனர். அதில், ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆட்டோவில் 27 பிளாஸ்டிக் மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்த 1,350 கிலோ (1¼ டன்) ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவற்றை அதிகாரிகள் வேலூர் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.

மேலும் இதுகுறித்து உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆட்டோ ஓட்டி வந்தவரிடம் விசாரித்தனர். விசாரணையில், அவர் பொய்கையை சேர்ந்த முத்து என்கிற முத்தப்பா (வயது 39) என்பதும், பொய்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அவற்றை ஆந்திர மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்ய ஆட்டோவில் கடத்தி செல்ல முயன்றதும், வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருவதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் முத்துவை கைது செய்தனர். மேலும் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்