வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் - போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Update: 2019-12-22 22:00 GMT
கொடைக்கானல், 

‘மலைகளின் இளவரசி‘ என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் ஆண்டுதோறும் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.

அதன்படி நேற்று வாரவிடுமுறையையொட்டி அதிகாலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மோட்டார் சைக்கிள், கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக பைன்மரக்காடுகள், மோயர் பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் வாகன ஓட்டிகளும், சுற்றுலா பயணிகளும் பெரிதும் அவதி அடைந்தனர்.

இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்தை சீரமைத்தனர். அதன்பின்னரே போக்குவரத்து சீரானது. இதற்கிடையே சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக சுற்றுலா இடங்கள் களை கட்டின. சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக மேக கூட்டங்கள் தரையிறங்கியவாறு சென்றன.

மேலும் அங்குள்ள நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்வதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.

மோயர்பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணாகுகை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது. சுற்றுலா பயணிகளின் வருகை எதிரொலியாக, சுற்றுலா தொழிலை நம்பியுள்ள அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்