அனுமதியின்றி கட்சிக்கொடியுடன் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - கலெக்டர் எச்சரிக்கை

அனுமதியின்றி கட்சிக்கொடியுடன் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2019-12-22 22:45 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் கண்ணன் தலைமை தாங்கினார். தேர்தல் பார்வையாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் பேசியதாவது:-

அனைத்து அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். வழிபாட்டுத்தலங்களில் பிரசாரம் செய்யவோ, தனிநபர்களை விமர்சனம் செய்யவோ, இதர கட்சியினரின் பிரசாரங்களுக்கு இடையூறு செய்யவோ கூடாது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில் அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்வது கூடாது. சாதி, மத உணர்வினை தூண்டும் வகையில் செயல்படக்கூடாது. இரவு 10 மணிக்கு பின்னரும், காலை 6 மணிக்கு முன்னரும் பிரசாரங்கள் செய்யவோ கூட்டங்கள் நடத்தவோ கூடாது.

அரசு பொது கட்டிடங்களில் எவ்விதமான விளம்பரங்களும் செய்யக்கூடாது. துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றில் அச்சிடப்பட்ட அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி இருக்க வேண்டும். கட்சிக்கொடியுடன் செல்லும் வாகனங்கள் மற்றும் பிரசார வாகனங்களுக்கு முறையான அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி கட்சிக்கொடியுடன் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நட்சத்திர பேச்சாளர் மற்றும் ஒலிப்பெருக்கி வாகனங்கள் மூலம் பிரசாரங்கள் செய்ய சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறையான அனுமதி பெற வேண்டும்.

மேலும், கண்டறியப்பட்ட பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை வீடியோ கிராபி, இணையதள கண்காணிப்பு, நுண் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் ஆகிய முறையில் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் இருப்பின், பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார் மற்றும் கருத்துகளை நேரிலோ அல்லது 9791532048 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தேர்தல் பார்வையாளர் சீனிவாசன் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி எந்தவித சட்ட- ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வகையில் நேர்மையான, அமைதியான, முற்றிலும் சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெறுவதற்கு உரிய ஒத்துழைப்பு நல்குமாறு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தேர்தல் பார்வையாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெருமாள்,மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், உதவி கலெக்டர் தினேஷ்குமார், திட்ட இயக்குனர்கள் சுரேஷ், தெய்வேந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனி உள்பட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்