காஞ்சீபுரத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

காஞ்சீபுரத்தில், மக்கள் குறை தீர் நாள் கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது. நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்.

Update: 2019-12-24 22:30 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியத்தொகை, வீட்டுமனைபட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, ரேஷன்கார்டு, பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 197 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்தையும் மாவட்ட கலெக்டர் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். இந்த கூட்டத்தில், பழங்குடியினர் மேம்பாட்டிற்கான மைய அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் செலவில் தொகுப்பு வீடுகளை கட்ட 12 பேருக்கு பணி ஆணைகளையும், தலா ரூ.2½ லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 6 தொகுப்பு வீடுகள் 6 பழங்குடியினருக்கும் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 2 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தேசிய அட்டைகளையும், கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, மாவட்ட வழங்கல் அதிகாரி கஸ்தூரி, தனித்துணை கலெக்டர் மாலதி, மாவட்ட ஆதிதிராவிட நல அதிகாரி தனலட்சுமி, முதல் அமைச்சர் காப்பீட்டு திட்ட அதிகாரி மணிகண்டன், மாவட்ட ஆய்வுக்குழு அதிகாரி தணிகைவேல் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்